அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

விநாயகர்

பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்!





இப்போ நாம் முதலில் பிள்ளையாரைப் பத்தித் தெரிஞ்சுக்கலாமா? நாம எழுதறப்போ கூட பிள்ளையார் சுழின்னு போட்டுத் தான் எழுதுவோம், இல்லையா? பிள்ளையார் சுழி எப்படிப் போடணும்னு தெரியும் இல்லையா? 2 மாதிரிப் போட்டுக் கீழே 2 கோடு போடணும். இது "ஓம்" என்னும் எழுத்தின் சுருக்கம்னு சொல்லுவாங்க. நாம எந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிட்டுத் தான் ஆரம்பிக்கணும். அப்படித்தான் ஆரம்பிப்போம். பிள்ளையாரைக் கும்பிட்டு ஆரம்பிக்கிற வேலையில் தடங்கல் வராமல் இருக்கும்னு ஒரு நம்பிக்கை. அதனால் தான். நாம செய்யற காரியத்தில் தடங்கல் ஏற்படுவது நம்மளோட துரதிருஷ்டம்னு நினைப்போம் இல்லையா? அதனாலே தான் முதலில் பிள்ளையாரை நினைச்சுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அது எப்படி வேணாலும் இருக்கலாம்.


"விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் --
விநாயகனேவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் படுமின் பணிந்து.!"


என்று ஒரு தமிழ்ப் பாடல் இருக்கிறது. இதன் அர்த்தம் என்னன்னா, நம்மளோட வினை எல்லாத்தையும், அதாவது நாம் செய்யற, செய்யப் போற பாவங்கள் எல்லாத்தையும் வேரோடு அறுத்து விடுவான் விநாயகன் என்று முதல் வரிக்கு அர்த்தம். 2வது வரிக்கு விநாயகன் நம்முடைய வேட்கை தணிவிப்பான் என்றால் நம்முடைய நியாயமான வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். அடுத்து என்ன சொல்றாங்கன்னா, "விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்" இந்த உலகமே அவருடைய தொந்திக்குள் அடங்கி இருக்கிறதுன்னு அர்த்தம். அதான் விநாயகர் தொந்தி பெரிசா இருக்கு பார்த்தீங்களா? இந்த மாதிரியான பெரிய தொந்திக்குள் உலகே அடக்கி இருக்கும். இந்த விநாயகர் தான் இந்த மண்ணால் ஆகிய பூமிக்கும், சுடர் விட்டுப் பிரகாசிக்கும் விண்ணான ஆகாயத்துக்கும், சகலத்துக்கும் நாயகன், அதாவது தலைவன் ஆகிறான். அடுத்து என்ன சொல்றாங்க? ஆகையால் அந்த விநாயகனை வணங்கிக் கும்பிடு, உன்னோட எல்லா வேலையும் நல்லா நடக்கும். அதான் "தன்மையிலே கண்ணிற்படுமின் கனிந்து!"ன்னு சொல்றாங்க. "கனிந்து"ங்கிற வார்த்தையோட முழு அர்த்தம் விநாயகனின் சக்தியை நாம் நல்லாத் தெரிந்து கொண்டு, மனம் கனிந்துன்னு இந்த இடத்திலே அர்த்தம் பண்ணிக்கணும்.


அடுத்து இன்னொரு முறையிலே ஸ்லோகம் சொல்லிக் கூட விநாயகரை வழிபடலாம்.


"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உப சாந்தயே!"


மஹாவிஷ்ணுவிற்கு நிகரானவரும், வெள்ளை உடை அணிந்தவரும், ரொம்பவே மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான அந்த விநாயகரைக் கும்பிடுகிறேன். என்னுடைய காரியங்களில் உள்ள விக்னங்களை நிவர்த்தி செய்து வேலைகளை முடித்துக் கொடுக்கட்டும்." என்று வேண்டிக் கொண்டு தான் பெரியவங்க எல்லாம் அவங்க ஜபம், தபம், பூஜை, புனஸ்காரம் எல்லாம் செய்வாங்க இல்லையா? அதான் மேற்படி ஸ்லோகத்தின் கருத்து.
பிள்ளையார் தோற்றம்
பிள்ளையார் எப்படித் தோன்றினார்ன்னு இப்போப் பார்ப்போமா? ரொம்ப நாளைக்கு முன்னே, அதாவது ரிஷிகள், முனிவர்கள்னு எல்லாருமா நிறைய இருந்தப்போ மரகத முனிவர்னு ஒரு முனிவர் இருந்தாராம். அவர் தவம் செய்வதற்குப் போன இடத்தில் விபுதைன்னு ஒரு அசுரப் பெண்மணி அவரைக் கல்யாணம் செய்துக்க ஆசைப் பட, முனிவர் மறுத்தும், பிடிவாதமாய்க் கல்யாணம் செய்து கொள்கிறாள். அவங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது, என்னதான் முனிவரோட புத்திரனா இருந்தாலும், அவங்க அம்மாவோட வளர்ப்பினாலே அவன் ஒரு அசுரனாத் தான் வளர்ந்து வந்தான். அவன் பேர் கஜமுகாசுரன். இந்த அசுரன் தேவர்களுக்குப் பலவகையில் தொந்திரவு கொடுத்து வந்தான்.


(பொதுவாகவே நமக்குள்ளேயே ஒரு மனசு நல்லது நினைக்கும். ஒரு மனசு பொல்லாத விஷயத்தை யோசிக்கும். இப்போப் பக்கத்துப் பையனோ, பொண்ணோ தப்பு செய்தால் உடனே நாம டீச்சர் கிட்டே சொன்னா அது நல்ல மனசு. அப்படி இல்லாமல் நாமளே அவனை அடிச்சோ, கடிச்சோ தண்டிச்சோம்னா அது கெட்ட மனசு, இல்லையா? டீச்சர்னு ஒருத்தங்க பெரியவங்களா இருக்கும்போது, எதுவா இருந்தாலும் அவங்க கிட்டேத் தான் சொல்லணும், சொல்லுவோம். இந்த அசுரங்க அப்படி இல்லை, எதுவா இருந்தாலும் அவங்களே முடிவு எடுப்பாங்க. கடவுள்களையும் வேண்டிக்கிட மாட்டாங்க, அவங்க குருவும் சரியானபடி வழிகாட்ட மாட்டார். அப்படி அமைந்து போச்சு. இதுகூட ஏன் ஏற்பட்டதுன்னு கேட்டா, எல்லாருக்குமே வாழ்வோ, தாழ்வோ எல்லாமே ஏற்படும். கஷ்டமோ, சுகமோ எது வேணாலும் கிடைக்கும். எல்லாத்தையும் சமாளிச்சு வரணும்னு நமக்கு எல்லாம் மறைமுகமாத் தெரிவிக்கிறதுக்காக நடக்குது.)


அப்படித்தான் இந்த கஜமுகாசுரனும் இருந்தான். அவனாலே தேவர்களுக்கு ரொம்பவே தொல்லை ஏற்பட்டது. அவன் ஈஸ்வரனை நோக்கிக் கடும் தவம் செய்து பலவிதமான வரங்களை வாங்கி வந்தான். அதிலே ஒண்ணுதான் தன்னைக் கொல்பவன் மனிதனாயும் இருக்கக் கூடாது, மிருகமாயும் இருக்கக் கூடாது, ஒருவர் உருவாக்கிய ஆயுதத்தில் தோன்றக் கூடாது, ஒருவர் உருவாக்கின ஆயுதத்தில் என்னைக் கொல்லக் கூடாது என்று ஏகப்பட்ட வரங்கள். சாமிதான் நமக்கு வரம் கொடுத்து விட்டதே, இனிமேல் நம்ம பாடு ஜாலிதான்னு அவன் நினைச்சான். சாமி வரம் கொடுத்தாலும் அதை நாம ஒழுங்கா வச்சிருக்கோமான்னு அவர் பார்க்க மாட்டாரா என்ன? அதை அந்த அசுரன் மறந்தே போனான். அவன் பாட்டுக்கு இஷ்டத்துக்குத் தேவர்களை அடிக்கிறதும், கொல்றதுமா இருக்கான். தேவர்கள் எல்லாம் என்ன செய்யறதுன்னு ரொம்பவே யோசிச்சாங்க. தேவர்கள் நல்லா வாழ்ந்தாத் தான் மழை பொழியும், தண்ணீர், காற்று, உணவு உற்பத்தி எல்லாம் ஏற்படும். அவங்களோட வேலைக்கு இடையூறு வந்தால் யாருமே நிம்மதியா வாழ முடியாது. ஆகையால் தேவர்கள் எல்லாரும் மஹாவிஷ்ணுவிடமும், பிரம்மாவிடமும் போய் முறையிட்டாங்க. பிரம்மாவும், விஷ்ணுவும் எல்லாத் தேவர்கள் கூடவும் திருக்கைலை போய்ப் பரமசிவனைத் தரிசனம் செய்தார்கள். பரமசிவனிடம் தங்களோட கோரிக்கையைத் தெரிவித்தார்கள். தேவர்கள் செய்யும் காரியங்கள் எந்த விதமான தடங்கலும் இல்லாமல் நடக்கறதுக்காக வேண்டி ஒரு கடவுளை எங்களுக்கு உருவாக்கித் தரவும்னு கேட்டாங்க. விக்கினங்களைப் போக்க வல்ல விக்கின ராஜன் வேண்டும்னு தேவர்கள் விடுத்த கோரிக்கைக்கு சிவன் செவி சாய்த்தார்.


திருக்கைலாயமலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபம் இருந்தது. அதில் பார்வதியும், பரமேஸ்வரனும் போய் அங்கே எழுந்தருளினார்கள். "பள பள" வென்று ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஒளிவடிவங்கள் அந்த ஏழு கோடி மந்திரங்களுக்கு நடுவில் பிரகாசமிட்டுத் தெரிந்தன. அவை இரண்டும் "சமஷ்டிப் பிரணவம்", "வியஷ்டிப் பிரணவம்" என்ற பெயர்களில் உள்ள இரண்டு பிரணவங்கள். அந்த இரண்டு பிரணவங்களையும் பரமசிவனும், பார்வதியும் கருணையுடன் நோக்க, அவை இரண்டும் இணைந்து, அந்தப் பிரணவங்களில் இருந்து பிரணவ சொரூபமான பிள்ளையார் யானை முகத்துடன் தோன்றினார்.
விநாயகர் பற்றி இன்னும் சில கதைகள் இருக்கின்றன. முதலில் நாம் பார்த்தது ஒரு புராணத்தில் உள்ளது என்றால் "பார்கவ புராணத்தில்" வேறு விதமாய்ச் சொல்கிறார்கள். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மாதிரியாக விநாயகர் பற்றிக் கூறப் படுகிறது. பார்கவ புராணம் என்னும் விநாயக புராணத்தின் படி விநாயகரே முழு முதல் கடவுள். இந்த உலகை மட்டுமல்லாது மும்மூர்த்திகளையும் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்யுமாறு கட்டளை இட்டவரும் விநாயகரே ஆவார். ஒவ்வொரு கல்பத்திலும் இவ்வுலகம் அழிந்து மறுமுறை சிருஷ்டி ஆரம்பிக்கும் முன் அண்ட சராசரங்களிலும் உள்ள எல்லா ஜீவன்களும் விநாயகருக்குள்ளேயே ஒடுங்கும் என்று பார்கவ புராணம் சொல்லுகிறது. பிரளயத்துக்குப் பின் விநாயகர் வக்ரதுண்ட விநாயகராக அவதரித்து மும்மூர்த்திகளையும் படைத்தார். பின் அவர்களைத் தம் தொழில்களைச் செய்யுமாறு கூறி மறைந்தார். இந்த பார்கவ புராணத்தின்படி ஒரு முறை என்ன நடந்தது என்றால்:


பிரம்மா ஒரு சமயம் கொட்டாவி விடவே, அதிலிருந்து ஓர் அரக்கன் தோன்றினான். அவன் பெயர் சிந்தூரானனன் ஆகும். ஏனெனில் அவன் சிந்தூர வண்ணத்தில் இருந்தான். அவனுடைய செக்கச் சிவந்த நிறத்தால் பயந்துபோன பிரம்மா அவன் கேட்காமலேயே அவனுக்குச் சில வரங்களைத் தந்தார். சும்மாவே அரக்கன். அவனுக்கு வரம் வேறே இலவசமாய் வந்தால் கேட்க வேணுமா? மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். யாவரும் செய்வதறியாமல் திகைக்க, மும்மூர்த்திகளும் கணபதியைப் பணிந்தனர். விநாயகர் உடனே தோன்றி, "கவலை வேண்டாம். நான் உமா தேவியாரின் திரு வயிற்றில் அவதரிப்பேன்." எனக் கூறி மறைந்தார். அது போலவே கருவுற்ற சமயம், உமாதேவியாரின் திருவயிற்றில் காற்று வடிவில் நுழைந்த சிந்தூரானன் குழந்தையின் தலையைத் திருகி எடுத்துக் கொண்டு போய் விட்டான். குழந்தை பிறந்தது தலையே இல்லாமல். அதுகண்டு அனைவரும் பதறவே, கலங்காதீர்கள் என்று சொன்ன சிவபெருமான் முன்பொரு சமயம் கஜமுகாசுரன் கேட்டுக் கொண்டபடி அவனுடைய தலையைத் தன் குழந்தையின் தலை இருக்கும் இடத்தில் பொருத்தினார். அன்று முதல் அந்தத் தெய்வக் குழந்தை "கஜானனன்" என்ற பெயர் பெற்றான்.


உமா தேவியாரிடம் வளர்ந்து வந்த கஜானனன் உரிய காலம் வந்ததும் சிந்தூரனனை அழிக்கப் புறப்பட்டார். சிந்தூரானனைத் தூக்கி எடுத்துத் தன் துதிக்கையால் ஓங்கி அடித்து அவன் ரத்தத்தைத் தன் உடம்பில் பூசிக் கொண்டார். செந்நிறமான விநாயகர் அன்று முதல் "சிந்தூர விநாயகர்" என்ற பெயரும் பெற்றார்.
சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். "தத்துவ மசி" என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.


சரி, விநாயகர் பிறந்தாச்சு, அவர் எப்படி இருந்தார்னு பார்ப்போமா? யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள். இவருடைய திருமேனி மூன்று வகையில் ஆனது. இடைக்குக் கீழே பூத உடம்பு, இடைக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு, தலை மிருகத் தலை, ஒரு கொம்பு ஆண் தன்மை, கொம்பில்லாத பகுதி பெண் தன்மை, யானைத் தலை அஃறிணை, தெய்வ சரீரம் உயர்திணை. இந்த மாதிரித் தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் எல்லாமுமாய் விளங்குபவர் விநாயகர். "தத்துவ மசி" என்ற ஆறு எழுத்தின் வடிவமே விநாயகர்.



பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். இவரது திருவடிகள் ஞான சக்தியும், க்ரியா சக்தியும் ஆகும். இவருடைய பேழை வயிற்றில் உலகெல்லாம் அடங்கும். ஐந்து கரங்களும் ஐந்து தொழிலகளைச் செய்யும். எழுத்தாணி பிடித்த கரம் படைப்பையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம் வைத்திருக்கும் கை மறைத்தலையும், அமுத கலசம் ஏந்திய துதிக்கை அருளையும் குறிக்கும். மூன்று கண்களோ என்றால் முறையே சூரிய, சந்திர, அக்னியாகும். இவரின் உருவ அமைப்பில் எல்லா உருவங்களும் இருப்பதாய்க் கூறுகிறது "பார்கவ புராணம்" என்னும் விநாயக புராணம். இவருடைய நாடி பிரம்மா, முகம் வி்ஷ்ணு, கண் சிவன், இடப்பாகம் சக்தி, வலப்பாகம் சூரியன் என்று அமைந்திருப்பதாய்க் கூறுகிறார்கள். அடுத்து அவரை வழிபடும் முறை
சிவ பெருமானுனம், உமை அம்மையும் விநாயகரை ஆசீர்வதித்தனர். "யாராக இருந்தாலும் ஒரு செயலைத் துவங்குமுன் முதலின் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது." என்று அருளினார்கள். தீச் செயல்கள் புரிபவர்கள் யாரும் விநாயகரை வணங்கி விட்டு ஆரம்பிக்க மாட்டார்கள். அப்படியே ஆரம்பித்தாலும் ஏதேனும் இடையூறு வரும். இந்த வரம் கடவுளருக்கும் பொருந்தும் என்று அருளியதால் சிவபெருமான் ஒருமுறை திரிபுர அசுரர்களை வெல்லப் புறப்பட்ட சமயம் விநாயகரை வழிபடாமல் கிளம்பிச் சென்றதால் அவர் தேரின் அச்சு முறிந்தது என்று புராணம் கூறுகிறது. இதே போல் அகந்தையால் பிரம்மா விநாயகரை வழிபடாமல் சிரு்ஷ்டி செய்ய அவர் படைத்த மனிதர்கல், மிருகங்கள், பறவைகள் எல்லாம் பேய், பிசாசுகளாய் மாறிவிட்டன. பின்னர் கணபதியை ஆராதனை செய்து வழிபட்டபின் சரியான கோணத்தில் சிருஷ்டி ஆரம்பித்தது.


இப்போ மாம்பழக் கதையாகச் செவிவழியாக நாம் கூறுவது உண்மையில் அமிர்தத்தால் ஆன மோதகம் என்றும், அதை உலகைச் சுற்றிப் புண்ணியம் சேர்த்துக் கொண்டு வருபவருக்குத் தருவதாயும் சிவன் சொல்ல, விநாயகர் தாய், தந்தையை விடச் சிறந்த உலகம் இல்லை எனச் சொல்லி அவர்களைப் பணிந்து நிற்க, மோதகம் அவருக்குக் கிடைத்தது. அன்றில் இருந்து மோதகம் விநாயகருக்குப் படைக்கப் படும் பொருள் ஆனது என்கிறது புராணம். ஆனானப் பட்ட விநாயகரே தாய், தந்தையருக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் எப்படி நடக்க வேண்டும்? குழந்தைகளே! தெரிந்து கொள்ளுங்கள். விநாயகர் என்ற பெருக்கு அர்த்தம் என்ன தெரிய்மா? "வி" என்றால் தன்னிகரற்ற என்று பொருள் படும். நாயகர் என்றால் தலைவர். தன்னிகரற்ற தலைவரான இந்த விநாயகருக்குக் குரு யார் தெரியுமா? சூரியன் தான் விநாயகரின் குரு. அது போல் இன்னொருவருக்கும் சூரியன் தான் குரு. அவர் யார் தெரியுமா? நம் வாயு புத்திரன், வானர வீரன், அஞ்சனை புத்திரன் அனுமந்தனுக்கும் சூரியன் தான் குரு. இருவரும் சூரியனிடம் தான் வேத சாஸ்திரங்களைப் பயின்றார்கள். அதுவும் எப்படி? நம்ம வகுப்பில் உட்கார்ந்து கேட்பதைப் போல் எல்லாம் இல்லை.


சூரியனோ தாங்க முடியாத சூடு உள்ளவன். அவனிடம் பாடம் கேட்பது என்றால் லேசா? நம்மால் முடியத் தான் முடியுமா? விநாயகரையும், அனுமனையும் போல் சக்தி வாய்ந்தவர்களால் தான் முடியும். தினம் தினம் உலகை வலம் வருகிறான் சூரியன். ஒரு நிமி்ஷம் கூடச் சும்மா இருப்பதில்லை. இதிலே அவன் செய்யும் வழிபாடு வேறு. அப்போ என்ன செய்யலாம்? சூரியன் தினமும் ஸ்ரீமன்நாராயணனை வழிபடும் நேரம் அவனை வலம் வந்து பாடம் கேட்டு சாஸ்திரங்களைப் பயின்றவர் விநாயகர். எவ்வளவு கஷ்டம் இது? இப்படி எல்லாம் க்ஷ்டப்பட்டுப் பாடம் பயின்றார் விநாயகர். அனுமன் எப்படிப் பாடம் பயின்றார் தெரியுமா? வாயுவேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் சூரியனின் ரத்ததிற்கு முன்னால் கை கூப்பி நின்று ரதம் எந்த வேகத்தில் போகிறதோ அதே வேகத்தில் பின்புறமாய் நடந்து பாடம் கேட்டானாம் அனுமன். இரண்டு பேரும் ஒரே குருவின் மாணாக்கர்கள் என்பதால் தான் நாம் எந்தக் காரியத்தையும் பிள்ளையாரில் தொடங்கி அனுமனில் முடிக்கிறோம். இன்றைய நாளில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது" என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு தப்பு தெரியுமா?


நாம் பூஜையோ பஜனையோ செய்யும் போது எப்போதும் பிள்ளையார் பூஜையில் ஆரம்பித்து, அனுமன் பூஜையில் முடிக்க வேண்டும். அது தான் முறை. இதைத் தான் யாரோ பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது எனச் சொல்லி வைக்க, சம்பிரதாயமான பூஜை முறைகளின் அர்த்தமே மாறி விட்டது. இப்போ நாம் செய்யும் தெய்வ வழிபாடு எல்லாமே ஆவணி மாதம் சுக்கிலச் சதுர்த்தியில் வரும் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்கும். அதுக்கு அப்புறம் ஸ்ரீராமநவமிக்குப் பின் வரும் அனுமத் ஜெயந்தியில் முடியும் நம்முடைய பூஜை புனஸ்காரங்கள். ஆனால் இன்றோ மாறிச் செய்து வருகிறோம். அனுமத் ஜெயந்திக்கு அப்புறம் சில மாதங்களுக்கு ஒன்றுமே இருக்காது. திரும்ப அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியில் ஆரம்பிக்க வேண்டும்.
விநாயகரை மிகவும் சுலபமாய் வழிபடலாம். அணுகுவதற்கு மிக எளியவர் அவர். மஞ்சள் தூளில் நீர் சேர்த்தோ, களிமண்ணாலோ அல்லது சாண உருண்டையாலோ விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழி பட முடியும். கேட்ட உடனேயே வரம் கொடுப்பவர் விநாயகர். ஆனால் நாம் வேண்டுவது பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருத்தல் வேண்டும். விநாயகரை வழிபடுவதால் எல்லா வினைகளும் வேரோடு அறுக்கப் படுகின்றன. கணங்கள் அனைத்துக்கும் அதிபதியான விநாயகர் வழிபாடு எப்படிச் செய்ய வேண்டும் தெரியுமா?


நம் உடலில் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எண்ணற்ற நரம்புகள் உள்ளன. அந்த நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாய் இயங்கினால்தான் நம்மால் எந்த வேலையையும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கு வழி காட்டுவது விநாயக வழிபாடு. குழந்தைகளே! விநாயகர் சன்னிதிக்கு முன்னால் நாம் இரண்டு கைகளாலும் தலையின் இரு பொட்டுக்களிலும் குட்டிக் கொள்வோமே, அதன் காரணம என்ன தெரியுமா? நம்முடைய அந்த இரு நெற்றிப் பொட்டுக்களிலும் தான் சுறுசுறுப்பைத் தூண்டும் நரம்பு மண்டலம் ரத்த ஓட்டம் பாய்ந்து சுறுசுறுப்பைப் பெறும். அதுவும் இரண்டு கைகளையும் மாற்றி வைத்துக் கொண்டு வலது கையால் இடப்பாகத்திலும், இடது கையால் வலப்பாகத்திலும் குட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் இடது காதையும், இடது கையால் வலது காதையும் பிடித்துக் கொண்டு "தோர்பி கரணம்" போட வேண்டும்.


யோக முறையில் ஒன்றான இதன் பெயர் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதன் அர்த்தம் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது எனப் பொருள். இது தான் மருவி தோப்புக் கரணம் என்றாகி விட்டது. இவ்வாறு தோர்பி கரணம் போட்டு வழிபடுவதால் நம்முடைய உடலில் மூலாதாரம் என்று சொல்லப்படும் இடுப்பின் பின் பகுதியில் உள்ள சக்தி மேலெழும்பி உடல் எங்கும் பரவி சுறு சுறுப்பைக் கொடுக்கிறது. மனம் அமைதி அடையும், உடல் சுறுசுறுப்படையும். பள்ளியில் சில மாணவர்கள் அதிகமாய்ப் படிக்காமல் இருந்தால் அவர்களுக்குத் தோப்புக்கரணம் போடச் சொல்லித் தண்டனையை ஆசிரியர் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதன் காரணம் என்னவென்று இப்போது புரிகிறதா? அந்த மாணவர்களின் மந்த நிலை மாறி சுறுசுறுப்படைந்து பாடங்களை ஒருமைப்பட்ட மனதுடன் கவனிப்பான் என்பதால் தான்.


இப்போ விநாயகருக்கான பிரசாத வகைகளைப் பார்ப்போமா? சொல்லுவது என்னமோ விநாயகருக்குன்னு தான். ஆனால் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு நாம் தானே சாப்பிடறோம்? அதனால் நமக்குப் பிடித்தமான உணவு வகைகளே அவருக்கும் படைக்கிறோம், பிடிச்சதுன்னும் சொல்லுகிறோம். அந்த உணவு வகைகள் என்னவென அருணகிரிநாதர் திருப்புகழில் ஒரு பட்டியலே போட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன். இதில் அவரைக்காய் மட்டும் அடங்காது. பொதுவாய்த் தமிழில் அவரை என்றால் உள்ளே விதை உள்ள எல்லா விதமான பீன்ஸ் வகைக் காய்களும் அடங்கும். இந்த அவரை, கரும்பு, நற்கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, தேன், அப்பம், அதிரசம், வடை, பட்சணம் எல்லாவற்றிற்கும் மேலாய் மோதகம். இதில் சிலவற்றைப் பற்றியும் விநாயகருக்கு ஏன் அருகம்புல் விசேஷம் என்றும் பின்னால் பார்ப்போமா?
விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல் மஞ்சள் பொடியிலேயோ அல்லது, பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து, அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான் பூஜைக்கு ஏற்றவர். தற்காலங்களில் கிரிக்கெட் ஆடும் விநாயகர் முதல், கணினியை இயக்கும் விநாயகர் வரை விநாயக சதுர்த்தி அன்று பார்க்க முடிகிறது. அவை எல்லாம் வழிபாட்டுக்கு உகந்தவை அல்ல. இவர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்.


எதை எழுத ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டுத் தான் எழுதறோம். இல்லையா? அதுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. உலகில் முதன் முதல் எழுத ஆரம்பித்தவரே நம்ம பிள்ளையார் தான். என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாம், வியாசரின் மகாபாரதத்தை அவர் சொல்லச் சொல்லத் தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதி வந்தவர் பிள்ளையார் தான். அதுவும் எப்படி? வியாசர் சற்றும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போவார். இவர் எதிர்க்கேள்வி கேட்காமல் எழுதிக் கொண்டே போக வேண்டும். ஒரு கட்டத்தில் வியாசருக்குப் பயமே வந்துடுச்சாம், என்னடா இது! இந்தப் பிள்ளையார் எழுதற வேகத்துக்கு நம்மால் சொல்ல முடியாது போலிருக்கேன்னு. உடனே என்ன செஞ்சாராம் தெரியுமா? நான் சொல்ற ஸ்லோகங்களோட அர்த்தத்தைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும் என்று பிள்ளையாரிடம் சொல்லி விட்டார். வேதமுழு முதல்வனான பிள்ளையாரைச் சோதனை போட்டால் சரியா வருமா? அவரும் அப்படியே சரின்னு அர்த்தம் புரிந்து கொண்டு எழுத ஆரம்பித்தாராம். இதுக்காகவே ரொம்ப யோசித்து, யோசித்துச் சிக்கலான பதங்களையும், அர்த்தங்களையும் கொண்ட ஸ்லோகங்களை வியாசர் சொல்ல, விநாயகர் மெளனமாய் அதன் பொருளை உணர்ந்து எழுதி வந்தார். பத்ரிநாத்தில் வியாசர் மகாபாரதம் எழுதிய குகையும், பிள்ளையார் எழுதியவாறு அமர்ந்த கோலத்தில் இருப்பதையும் தரிசிக்கும் வண்ணம் ஒரு கோயில், பத்ரிநாத்தில் இருந்து சீன எல்லைக்குப் போகும் வழியில் உள்ள "மானா" என்னும் கிராமத்தில் உள்ளது. இப்போதும் அந்தக் கோவிலையும், வியாசர் இருந்த குகையையும் தரிசிக்கலாம்.


பிள்ளையார் சுழிக்கு இன்னொரு காரணமும் உண்டு. சுழி என்பதே வளைசல், வக்ரம் என்றுதான் அர்த்தம். விநாயகரின் தும்பிக்கை வளைந்து சுருட்டிக் கொண்டு இருக்கிறது அல்லவா? பிள்ளையார் சுழி எப்படிப் போடுகிறோம்? முதலில் ஒரு வட்டம், அதுவும் அரை வட்டம், பின் ஒரு நேர்கோடு. பொதுவாய்ச் சக்கரங்கள் சுற்றுவதற்கு மத்தியில் ஒரு அச்சு வேண்டும். அந்த அச்சு வளையாமல் நேராக இருந்தால் தான் சக்கரம் சுற்றும். நாம் தீபாவளிக்கு விஷ்ணு சக்கரம் சுற்ற ஒரு நேரான கம்பியைத் தான் உபயோகிக்கிறோம் இல்லையா? அது போல்தான். இந்த உலகும், கிரகங்கள் அனைத்தும் வட்டமாய்த்தான் சுற்றி வருகின்றன, சூரிய சந்திரர் உள்பட. ஆனாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு ஆதாரமான சக்தி இருக்கும் இல்லையா? அது ஒரு நேர்கோடாய்த் தான் இருக்க முடியும். இதை நினைவு கூரவும் நாம் வட்டத்தை அரை வட்டமாய்ப்போட்டு விட்டுப் பின் ஒரு நேர்கோடு போடுகிறோம். மின்சாரம் எடுக்க எப்படி நீர்த்தாரையில் இருந்து சக்கரங்களை இணைத்து, அதாவது வட்டத்தில் இருந்து நேர்க்கோடாக மின்சாரத்தை எடுக்கிறோமோ அது போல்தான் இதுவும்.


"அ", "உ", "ம" மூன்றும் இணைந்தது தான் "ஓம்" என்னும் பிரணவம். அதை ஆங்கிலத்தில் எழுதும்போது "AUM" என்றே எழுத வேண்டும். இந்த அரை வட்டத்தில் ஆரம்பித்து நேர்கோடாக முடிகிற பிள்ளையார் சுழிக்கு இது தான் அர்த்தம். சிவசக்தியின் ஐக்கியத்தையும் குறிக்கிறது. "அ" என்ற சிருஷ்டியில் ஆரம்பித்து "உ" என்ற எழுத்தால் காப்பாற்றப் பட்டுக் கடைசியில் "ம" என்னும் எழுத்தால் சம்ஹாரம் செய்யப் படுகிறோம் அல்லவா? இந்த மூன்றில் நடுவில் உள்ள காக்கும் எழுத்தையே பிள்ளையார் சுழியாகப் போட்டு, அனைத்துக்கும் ஆதாரமும் இவரே, முடிவும் இவரே, சரணும் இவரே என்று தெரிவித்துக் கொள்கிறோம்.


விநாயக புராணத்தில் இன்னும் சில முக்கியமான நிகழ்ச்சிகளைச் சொல்ல நினைக்கிறேன்.


ஒரு சமயம் கெளண்டின்ய முனிவர் தன் மனைவியான ஆசிரியையுடன் தவ வாழ்க்கை வாழ்ந்து வந்த காலத்தில், அவர் அவ்வளவு செல்வம் பெற்றவராய் இருக்கவில்லை. கெளண்டின்யரோ விநாயகர் மேல் அளவற்ற பக்தியுடன் அவரைப் பூஜித்து வந்தார். தினமும் விநாயகருக்கு அருகம்புல்லால் அர்ச்சனைகளும் செய்து வந்தார்.


ஆசிரியைக்குக் கணவன் மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும் நாடி பெரும் பொருள் ஈட்டி வரவில்லையே எனத் தாபம் இருந்து வந்தது. என்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கணவனுக்கு உற்ற பணிவிடைகளைச் செய்து வந்தாள். என்றாலும் செல்வம் இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்தது அவளுக்கு. மனைவியின் முகவாட்டத்தைக் கவனித்த கெளண்டின்ய முனிவர் காரணத்தை அறிந்திருந்தாலும், மனைவியின் வாயாலும் அதைக் கேட்டு அறிந்தார்.


மனைவியின் மாயையை அகற்றவும், அவளுக்கு அருகின் மகிமையையும், இறைவனின் மேன்மையையும் உணர்த்த வேண்டி, கெளண்டின்யர் அவளிடம், அருகு ஒன்றை விநாயகருக்குச் சமர்ப்பித்து விட்டு எடுத்துத் தந்தார். "இந்த அருகைத் தேவேந்திரனிடம் கொடுத்து இதன் எடைக்கு ஈடாகப் பொன் பெற்றுக் கொள்வாயாக!" என ஆசியும் வழங்கினார்.


ஆசிரியை திகைத்தாள். "என்ன? ஒரு சிறிய அருகம்புல்லின் எடைக்கு ஒரு குந்துமணிப் பொன் கூட வராதே?" என நினைத்தாள். அலட்சியமாகவும், நிதானமாகவும் தேவேந்திரனை அடைந்தாள் கணவனின் உதவியுடன். அவனிடம் நடந்ததைச் சொல்லி இந்த அருகின் எடைக்குப் பொன் வேண்டுமாம் எனவும் கேட்கவே, தேவேந்திரன் திகைத்து அருகின் எடைக்குப் பொன்னா? என்னால் இயலாத ஒன்றே எனத் தவித்துத் தன் செல்வம் பூராவையும் தராசில் ஒரு பக்கமும், அருகை மறுபக்கமும் வைத்தான்.


அப்போது அருகின் எடைக்கு அந்தச் செல்வம் வரவில்லை. தேவேந்திரன் தானே ஏறி உட்காரவே சமனாயிற்று, தராசு. இப்போது திகைத்தாள் ஆசிரியை. இருவரும் கெளண்டிய முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தனர். கெளண்டின்ய முனிவரிடம் நடந்ததைச் சொன்ன ஆசிரியை வெட்கித் தலை குனிந்தாள். தேவேந்திரனைப் போகச் சொன்ன கெளண்டின்யர், ஆசிரியையிடம் இந்த அருகின் மதிப்பு உனக்குத் தெரியவில்லை என்று அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.


தேவலோகத்தில் தேவகன்னிகள் நாட்டியமாடிய வேளையில் அங்கே வந்த யமதர்ம ராஜன் தன் மனைவியைப் பார்க்க எண்ணித் தன் தர்ம லோகத்துக்குச் செல்லும் வேளையில் அவனின் உடலில் இருந்து வெளிப்பட்ட வெப்பம் ஒரு அசுரனாக மாறியது. அக்னியைவிடவும் அதிகமான வெப்பத்துடன் இருந்த அந்த அசுரன் "அனலாசுரன்" எனவே அழைக்கப் பட்டான். அக்னி தேவனுக்கே அவனை நெருங்க முடியாத அளவுக்குத் தகித்துக் கொண்டிருந்தான். யமதர்ம ராஜனைத் தவிர மற்றவர் அனலாசுரனின் கொடுமையால் தவித்தனர். அப்போது ஒரு அந்தணர் வடிவில் தோன்றிய விநாயகர், அவர்களைத் தேற்றி அனலாசுரனைத் தேடிப் போனார். தம் சுய உருவோடு விஸ்வரூபம் எடுத்த அவர், தன் துதிக்கையால் அந்த அனலாசுரனை அப்படியே எடுத்து விழுங்கினார்.


பேழை வயிற்றுக்குள் மூன்று உலகையும் அடக்கிய விநாயகரின் வயிற்றுக்குள் அனலாசுரன் போகவும் அனைவரும் வெப்பம் தாங்க முடியாமல் தவித்தனர். பிரம்மா விநாயகனின் மேனி குளிர்ந்தால் தான் இந்த வெப்பம் தணியும் என அனைவரையும் விநாயகரின் மேனி வெப்பத்தைக் குறைக்கச் சொல்லவே, அனைவரும் ஒவ்வொரு வழியில் விநாயகரின் வெப்பத்தைத் தணிவித்தார்கள். ஒருவர் பாலாக அபிஷேஹம் செய்ய, இன்னொருவர், சந்தனம், பன்னீர், தேன், தயிர் என அபிஷேஹம் செய்கின்றனர். அப்போது அங்கே வந்த ரிஷி, முனிவர்கள் விஷயம் தெரிந்து கொண்டு 21 அருகம்புற்களால் விநாயகரை அர்ச்சிக்கவே விநாயகர் மேனி குளிர்ந்தது.


இந்த மூவுலகின் வெப்பமும் குறைந்தது. அன்று முதல் விநாயக வழிபாட்டில் அருகு முக்கிய இடத்தைப் பிடித்தது. வேறு பூக்களோ, மலர்களோ, இலைகளோ இல்லாவிட்டாலும் ஒரு சிறிய அருகே விநாயகரை மனம் மகிழ்விக்க வைக்கும்


விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.


அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.


ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் "விப்ரதன்" என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய "முத்கலர்" என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.


"ப்ருகண்டி" என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.
விநாயகரைப் பலரும் வணங்கித் துதித்து அவர் அருளைப் பெற்றிருக்கின்றனர். அதில் முக்கியமான சிலர் பற்றி இங்கே காண்போம்:


கிருத வீர்யன் என்னும் மன்னன் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்தான். பலவிதமான யாகங்களும், பூஜைகளும் செய்தான். ஆனாலும் பலனில்லை. ஒரு நாள் அவன் கனவில், அவன் தந்தை தோன்றினார். அவனிடம் ஒரு சுவடிக் கட்டைக் கொடுத்து, "மகனே இதில் கண்ட விரதம் இருந்து விநாயகரை வழிபட்டு வா! அவர் அருளால் உனக்கு ஒரு மகன் பிறப்பான்!" என்று சொல்லி மறைந்தார். திடுக்கிட்டு எழுந்த மன்னன் கையில் நிஜமாகவே ஒரு சுவடிக் கட்டு இருக்கப் பண்டிதர்களிடம் அதைக் காட்டி விளக்கம் கேட்கின்றான் மன்னன்.


வேத பண்டிதர்கள் அந்த ஓலைச் சுவடியைப் படித்துவிட்டு வியப்புடன் அரசனிடம் சொன்னார்கள், "அரசே, இது விநாயகனை வேண்டிச் செய்ய வேண்டிய விரதம். இதை அங்காரக சதுர்த்தி விரதம் என்பார்கள். இந்த விரதத்தைப் பற்றிப் பிரம்ம தேவர் சொன்ன விஷயங்கள் சுவடியில் உள்ளன. நாங்கள் இது வரை கேட்டிராத விரதம் இது. இதை நன்கு படித்து அதன்படி நீங்கள் விரதம் இருக்க நாங்கள் உதவுகிறோம்." என்றனர்.


பெளர்ணமி தினத்துக்குப் பின்னர் வரும் சதுர்த்தியைப் பொதுவாகச் சங்கடஹர சதுர்த்தி எனச் சொல்லுவதுண்டு. அந்தச் சதுர்த்தியானது அங்காரகன் என்னும் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க் கிழமைகளில் வந்ததால் அதை அங்காரகச் சதுர்த்தி என்பது உண்டு. அம்மாதிரி அங்காரகச் சதுர்த்தி அன்று மன்னன் விரதத்தைத் துவக்கினான். விக்னம் இல்லாமல் விரதம் அனுசரித்து, விநாயகர் உதவியுடன் விரதத்தை முடித்தான். அவன் மனைவியும் கருவுற்றாள். மன்னனின் மகிழ்ச்சி, பிறந்த குழந்தையைப் பார்த்ததும் ஓடிப் போனது. கைகளோ, கால்களோ இல்லாமல் பிறந்தது ஒரு ஆண் குழந்தை மன்னனுக்கு!


கலங்கிய மன்னனும், ராணியும் விநாயகர் அருளினால் பிறந்த பிள்ளைக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் குறையை விநாயகர் தான் தீர்த்து வைக்க வேண்டும் என முழு மனதுடன் பிரார்த்தித்தனர். மகனுக்குக் "கார்த்த வீர்யன்" எனப் பெயரிட்டு வளர்த்து, உரிய வயது வந்ததும், கணேச மூல மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மூல மந்திரத்தை ஜபித்துப் பன்னிரு ஆண்டுகள் விடாமல் தவம் இருந்தான் கணபதியை நோக்கிக் கார்த்தவீர்யன். விநாயகரும் அவன் முன் தோன்றினார்.


"கார்த்தவீர்யா! குறையுடன் பிறந்த நீ இவ்வாறு நிறைவாக எம்மைப் பூஜித்தாய்! உனக்கு என் ஆசிகளைத் தருவதோடு அல்லாமல் ஆயிரம் கை, கால்கள் தோன்றவும் அருளுகிறேன்!" என வரம் தந்தார். ஆயிரம் கரங்களும், மிகுந்த பலத்துடனும், யாராலும் வெல்ல முடியாத திறத்துடனும் இருந்ததால் அர்ஜுனனுக்கு நிகரானவன் எனப் பேசப் பட்டு அவன் பெயரே "கார்த்தவீர்யார்ஜுனன்" என அழைக்கப் பட்டது. தனக்குக் கால்களும், கைகளும் அளித்த விநாயகருக்குக் கார்த்த வீர்யாஜுனன், பிரவாள வனம் என்னும் வனத்தில் பவளத்தால் சிலை அமைத்து ஆலயம் கட்டி வழிபாடு செய்தான்.


ஒரு முறை தேவேந்திரன் பூவுலகிற்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த மனிதர்களுக்கே உரிய பசியும், தாகமும் அவனுக்கும் ஏற்பட்டு விட்டது. பொதுவாகத் தேவர்கள் அமுதம் உண்டவர்கள் என்பதால் நம்மைப் போல் பசி, தாகம் அவர்களுக்குக் கிடையாது என்று சொல்லுவதுண்டு அல்லவா? மிக்கக் களைப்புடன் உணவைத் தேடி அலைந்த அவன் கண்களில் பட்டது ஒரு அழகிய ஆசிரமம். அருகே சென்று பார்த்தால் அது கபில முனிவரின் ஆசிரமம். சென்று முனிவரைப் பணிந்த தேவேந்திரனைப் பார்த்த முனிவர் தன் விருந்தோம்பலைக் கைவிடாமல் அவனைக் கனியும், பாலும் கொடுத்து உபசரித்தார்.


"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று!"


என்பது வள்ளுவன் வாக்கல்லவா? முனிவரின் உபசரிப்பினால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஏதேனும் பொருளைக் கொடுக்க எண்ணி, மிகவும் யோசித்துக் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி என்னும் அபூர்வ மணியைக் கபில முனிவருக்குப் பரிசாக அளித்தான்.


கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடிய சிந்தாமணி கிடைத்தும் பெரிதும் கர்வமோ, அதை வீணாகவோ உபயோகிக்காமல் முனிவரும் தனக்கு மட்டுமே அதைச் சொந்தம் ஆக்கிக் கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் வகையிலேயே அதைப் பயன்படுத்தி வந்தார். ஒரு நாள், காட்டுக்கு ஒரு அரச பரிவாரம் வந்தது, வேட்டைக்கு. அந்தப் பரிவாரத்தின் அரசன் கணன் என்பவர். அவர் வேட்டையாடி வரும் வழியில் கபில முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். மன்னனாக இருந்தாலும் தவமுனிவர்களையோ, ரிஷிகளையோ கண்டால் வணங்குவது மரபல்லவா? அதன்படி ஆசிரமத்திற்குள் சென்று முனிவரைப் பணிந்தான் கணன் என்னும் மன்னன். மன்னனை வரவேற்ற முனிவர், அவனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும், சிந்தாமணியின் உதவியால் அற்புதமான விருந்து அளித்தார். விருந்துண்ட மன்னன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதில் முனிவரின் மேல் பொறாமை கொண்டான்.


"என்ன? நாடாளும் மன்னன் நான்! காட்டில் தவம் செய்யும் ரிஷியிடம் போய் இந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இருப்பதா? என்னையே சேர வேண்டியது இந்தச் சிந்தாமணி!" என எண்ணினான் மன்னன் கணன். முதலில் முனிவரிடம் பணிவோடு கேட்போம், கொடுத்து விடுவார் என நினைத்துச் சிந்தாமணியைக் கொடுக்குமாறு பணிவோடு கேட்டான். முனிவர் சொன்னார்:"மன்னா, இது எனக்குப் பரிசாக வந்தது. தேவேந்திரனால் கொடுக்கப் பட்டது. பிறருக்குப் பரிசாக வந்த ஒரு பொருளை நீ அடைய எண்ணுவது தவறு. மேலும் பரிசுப் பொருளைப் பிறருக்குக் கொடுப்பதும் தவறு! என்னால் கொடுக்க முடியாது!" என்று திட்டவட்டமாய்ச் சொன்னார் கபில முனிவர். உடனேயே மன்னன் பெரிதாக நகைத்துவிட்டு முனிவரிடம் இருந்து பலவந்தமாய்ச் சிந்தாமணியைப் பறித்துக் கொண்டு போனான். ஆசிரமம் ஒளி இழந்தது. முனிவரின் மனமோ துயரத்தில் ஆழ்ந்தது. அடுத்தது என்ன? யோசனையில் ஆழ்ந்தார் முனிவர்.


அப்போது ஒரு அசரீரி எழுந்து, "முனிவரே, கணனிடம் இருந்து சிந்தாமணியைத் திரும்பப் பெறும் வல்லமை படைத்தவர் கணங்களுக்கெல்லாம் அதிபதியான "கணபதி" ஒருவரே! அவரைப் பூஜித்து வேண்டுகோள் விடுத்தால் உமது துயரம் நீங்கும்." என்று சொன்னது, அந்தக் குரல். உடனேயே கபில முனிவர் கணபதியைப் பல்வேறு துதிகளால் துதித்து, கணபதி ஹோமம், யாகங்கள் போன்றவை செய்து பூஜித்தார். மிகவும் மன ஒருமையுடன் கணபதியை வணங்கி வழிபட்டார். அவர் முன் தோன்றிய கணபதி, தாமே நேரில் சென்று கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்று வருவதாய்ச் சொல்லிவிட்டுக் கணனோடு கணபதியே நேரில் சென்று போரிட்டார். கணனை அழித்துச் சிந்தாமணியைத் திரும்பப் பெற்ற கணபதி, அதைக் கபில முனிவரிடம் திருப்பித் தர, முனிவரோ அதை முழு மனதோடு கணபதிக்கே பரிசளித்தார். "விநாயகரே, இந்த உயர்ந்த மணி இருக்க வேண்டிய இடம் உம்மிடமே. நீர் அதை எப்போதும் தரித்துக் கொண்டிருக்க வேண்டுகிறேன்." என்று சொல்லி அதைக் கணபதிக்கே அளித்து விட்டார். முனிவர் விலை உயர்ந்த பொருளைக் கணபதிக்குக் கொடுத்தாலும், அதைக் கணபதி என்றும் அணிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு பணிவான வேண்டுகோளாகவே வைத்தார் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.


விநாயகர் அன்று முதல் "சிந்தாமணி விநாயகர்" எனவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்.


விநாயகர் பற்றிய பல்வேறு புராணக் கதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் பிரம்மா விநாயகரைப் பூஜித்த வரலாறு வருமாறு:






படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன் படைப்புக்களில் பெருமிதம் கொண்டு, தன்னாலேயே அனைத்தும் நடக்கின்றன என்று ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தோடு அவர் படைத்த படைப்புக்கள் பின்னமாகிக் கொண்டு வந்தன. தொடர்ந்து இம்மாதிரிப் பின்னமான படைப்புக்கள் ஏற்படவே பயந்து போனார் பிரம்மா. தன்மேல் என்ன தவறு என யோசித்த போது, அவர் மனதில் தோன்றியது விநாயகருக்கு வழிபாடு செய்வதை நிறுத்தியது தவறு என உணர்ந்தார். உடனேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விநாயகரை நினைத்துத் தியானத்தில் அமர்ந்து முழு மனதோடு அவரைத் தியானித்தார். பிழை உணர்ந்த பிரம்மாவைச் சோதிக்க விரும்பாத விநாயகர் அவர் முன் தோன்றி தமது சக்திகள் ஆன இச்சா சக்தி, ஞான சக்தி இரண்டையும் பிரம்மாவுக்கு அளித்து இவற்றின் உதவியோடு படைப்புத் தொழிலைச் செய்து வரும்படி ஆசி வழங்கினார். படைப்புத் தொழிலை ஆரம்பித்தார் பிரம்மா. விநாயகர் கொடுத்த இரு சக்திகளையும் இரு பெண்களாய் மாற்றி வளர்த்து வந்தார்.


கணபதியின் சக்திகள் கணபதியிடமே போய்ச் சேர வேண்டிய வேளை வந்து விட்டது என உணர்ந்த பிரம்மா, நாரதரை அனுப்பிக் கைலையில் சிவபெருமானிடமும், உமை அம்மையிடமும் விவரத்தைச் சொல்லி வருமாறு அனுப்பி வைத்தார். நாரதரும் கைலை சென்று அம்மை அப்பனிடம் விஷயத்தைத் தெரிவிக்க, மனம் மகிழ்ந்த அம்மை, அப்பன் இருவரும் சித்தி, புத்தி என்ற பெயருடன் வளர்ந்து வந்த அந்த இரு பெண்களையும் கணபதிக்கு மணம் முடிக்கலாம் என்று சொல்லவே, பிரம்மாவும் சந்தோஷத்துடன் உடன்பட்டார். அவ்வாறே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்த நன்னாளில், சித்தி, புத்தி என்னும் தம் சக்தி தேவிகள் இருவரையும் கணபதி திருமணம் செய்து கொண்டார். நம் தென்னாட்டைப் பொறுத்த வரை கணபதி பிரம்மச்சாரி. ஆனால் வடநாட்டில் அவர் திருமணம் செய்து கொண்ட குடும்பஸ்தர். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு பெண்ணும் உண்டு. அந்தக் கதை வரும் நாட்களில்.


இது போலவே விஷ்ணுவும் விநாயகரைப் பூஜித்தே மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களைச் சம்ஹாரம் செய்ததாகவும் வரலாறு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் காதுகளில் இருந்து தோன்றிய இரு அரக்கர்கள் மது, கைடபர் என்னும் இருவர். தோன்றிய கணத்திலேயே அசுர வடிவெடுத்து மூவுலகையும் அச்சுறுத்தி வந்தனர் இருவரும். நான்முகனிடம் சென்று முறையிட்ட தேவர்களை, மகாவிஷ்ணு ஒருவரே இவர்களை அழிக்கத் தகுதி படைத்தவர், ஆகவே அவரிடம் சென்று முறையிடுவோம் என பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் வந்து முறையிட்டார். நடந்ததை அறிந்த அனந்த சயனன், தேவர்களுக்கும், பிரம்மாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, மது, கைடபர்களுடன் போருக்குச் சென்றார். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் யுத்தம் செய்தும் மது, கைடபர்களை மகா விஷ்ணுவால் அழிக்க முடியவில்லை. வெற்றி. தோல்வி இன்றி நீடித்த இந்த யுத்தத்தில் ஏதோ குறை என உணர்ந்த மகாவிஷ்ணு தன் மாயையால் அவ்விடத்தை விட்டு மறைந்து கைலை சென்று ஈசனிடம் வேண்ட, ஈசனும் வேழ முகத்தானை மறந்தது தான் தாமதத்துக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டினார். ஈசன் சொன்னது போல் விநாயகரை பூஜிக்க பூமிக்கு வந்தார் மகாவிஷ்ணு. மூலப் பொருளை மனதில் வைத்து முழு மனதுடன் பூஜிக்க மகிழ்ந்த விநாயகர் அசுரர்களை அழிக்கும் பராக்ரமத்தை விஷ்ணுவுக்கு அளித்து அருளினார். பின்னர் களம் இறங்கிய எம்பெருமான் நாராயணன், மது, கைடபர்களை அழித்தான் என்கிறது விநாயக புராணம்.
விநாயகரின் திருவிளையாடல்களில் அநேகம் உண்டு. அவற்றில் சில குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாய் இருக்கின்றன. ராவணேஸ்வரன் ஒரு முறை கைலைக்கு வந்து, சிவ வழிபாடு முடிந்துத் திரும்பிச் செல்லும் வேளையில், சிவலிங்கத்தின் ஜோதி வடிவம் ஒன்றைத் தனக்கு இலங்கையில் வைத்துப் பூஜிக்க வேண்டி இறைவனை வேண்டிப் பெற்றுச் செல்கின்றான். ராவணனிடம் அதைக் கொடுத்துப் பூஜித்து வரும்படி சொன்ன ஈசன் அவனிடம், "இந்த லிங்கத்தை வழியில் எங்கும் வைத்துவிடாதே! அப்புறம் அது உன்னுடையது அல்ல!" என்று எச்சரித்து அனுப்புகிறார். ராவணனும் அவ்வாறே வழியில் எங்கும் லிங்கத்தை வைக்காமல் வேக வேகமாய் இலங்கை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றான்.


ஆனால் தேவாதி தேவர்களுக்கு அந்த லிங்கம் பாரதத்திலேயே பிரதிஷ்டை செய்யப் படவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் ராவணனோ சிறந்த சிவ பக்தன். அவனிடம் இருந்து அதைத் திரும்பப் பெற முடியாது. என்ன செய்யலாம்? யோசித்த அமரர் குலத்தவர் விநாயகனைப் பணிய, விநாயகனோ, அவனிடம் இருந்து அறவழியில் மட்டுமே லிங்கத்தைக் கேட்கலாமே அன்றி, பறிக்க முடியாது எனச் சொல்கின்றார். பின்னர் ஒரு சிறு பிள்ளை உருவத்தில் ராவணனின் வழியில் போய் நின்று கொண்டு அங்கும், இங்குமாய் அலைகின்றார். மாலை ஆயிற்று, மாலைக் கடன்கள் நிறைவேற்ற வேண்டிய நேரமும் வந்து விட்டது. மேலைக்கடலில் சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். ராவணன் மாலைக்கடனை எவ்விதம் முடிப்பது எனச் சிந்தித்தான். லிங்கத்தையோ கீழே வைக்க முடியாது. பின்னர் என்ன செய்வது? யோசனையுடன் பார்த்தவன் கண்களுக்குச் சிறு பிள்ளை ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. உடனேயே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டு, "பிள்ளாய்! சற்று நேரம் இந்த லிங்கத்தைக் கையில் வைத்துக் கொண்டிரு. கீழே வைத்து விடாதே. நான் என் மாலை நேரப் பூஜைகளையும், வழிபாடுகளையும் நிறைவேற்றி விட்டு வருகின்றேன். அதுவரை உன் கையிலேயே இந்த லிங்கம் இருக்கட்டும்," என்று சொல்லுகிறான்.


பிள்ளையாய் வந்த பிள்ளையாரோ, "எனக்குக் கை வலிச்சால் நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்கவே, அதற்குள்ளாய் நான் வந்து விடுவேன், என்று சொல்லிய ராவணன், மாலைக் கடன்களை நிறைவேற்றக் கடலில் இறங்கி சந்தியாவந்தனம் போன்ற ஜபங்களை ஆரம்பிக்கின்றான். ஜபங்களில் ராவணன் ஆழ்ந்து போகும் வரை கரையில் நின்ற விநாயகனோ, ராவணன் இனி பாதியில் வர முடியாது என்பது நிச்சயம் ஆனதும், அந்த லிங்கத்தைக் கீழே வைத்து விட்டு, "எனக்குக் கை வலிக்கிறது, நான் போறேன்' என்று கூவிக் கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தான். கோபம் கொண்ட ராவணன், பாதியிலேயே ஓடி வந்து, அந்தப் பையனைக் கூப்பிட்டுக் கொண்டே வந்து லிங்கத்தை எடுக்கக் கீழே குனிந்தால் ஆஹா, லிங்கம் அப்படியே பிரதிஷ்டை ஆகிவிட்டதே? இது என்ன ஆச்சரியம்? திகைத்தான் ராவணன். சுற்றும், முற்றும் பார்த்தான், விநாயகர் தன் சுய உருவில் காட்சி கொடுத்தார், "ராவணேஸ்வரா, இந்த லிங்கம் இங்கே மேலைக் கடலில், "திருக்கோகர்ணம்" என்ற பெயரில் இங்கேயே நிலைத்து நிற்கட்டும். உனக்கும் இங்கே முக்கியத்துவம் உண்டு. நீ சிவ பூஜையைத் தொடர்ந்து செய்து வா. இது இவ்வாறு இருக்க வேண்டும் என்பது நியமம். ஆகவே கலங்காதே!" எனச் சொல்ல மனம் ஒருவாறு ஆறுதல் அடைந்த ராவணன், லிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்துவிட்டு இலங்கை நோக்கிப் போனான்.


இந்தக் கோயில் கர்நாடகம், கோவா எல்லையில் மேலைக்கடலில்(அரபிக்கடல்) கடலைப் பார்த்தவண்ணமாய் உள்ளது. கோயிலுக்குத் திருக் கோகர்ணம் என்றே பெயர் இன்னமும் வழங்குகிறது.
ஒளவைப் பாட்டி சிறு வயதிலேயே அவள் தாய், தகப்பனால் கைவிடப் பட்டு வேறு ஒருவர் தன் வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து வந்த பெண் ஆவார். அவர் சிறு வயதில் இருந்தே விநாயகரை வழிபட்டு அவர் மேல் மிக்க பக்தி பூண்டு வழிபாடுகள் நடத்தி வந்தார். திருமணத்தில் அவருக்கு ஆசையே இல்லை. என்றாலும் பெற்றோர் வளர்ப்பாக இருந்தாலும் தங்கள் மகளுக்கு முறையாகத் திருமணம் செய்து பார்க்கவே ஆசைப் பட்டனர். ஆகவே ஒரு பையனைப் பார்த்து நிச்சயமும் செய்தனார். ஆனால் ஒளவைக்கோ திருமணத்தில் நாட்டமே இல்லை. என்ன செய்வது? தன் ஊரில் இருந்த குளத்தங்கரைப் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டார் ஒளவைப் பாட்டி. ஆனால் அப்போது அவர் பாட்டி அல்ல. இளம்பெண் தான். அந்த இளம்பெண் இவ்வாறு வேண்டித் துதித்ததும் அவளுக்கு உண்மையிலேயே திருமணத்தில் நாட்டம் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட பிள்ளையார், அவளை அந்தச் சிறு வயதிலேயே கிழவி ஆக்கினார். இவ்விதம் சிறு வயதிலேயே கிழவி ஆன அந்தப் பெண்தான் ஒளவைப் பாட்டி என்று நம் அனைவராலும் அழைக்கப் படுகின்றாள்.


இந்த ஒளவைப் பாட்டி விநாயகர் மேல் பல பாடல்கள் இயற்றி இருந்தாலும், இவரின் விநாயகர் அகவல் என்னும் பாடல் தொகுப்பு மிகுந்த பிரசித்தி அடைந்த ஒன்று. இந்தப் பாடலை அவர் எப்போது இயற்றினார் தெரியுமா? ஒரு முறை சுந்தரமூர்த்தி நாயனார் கைலை செல்ல இறைவனை வேண்ட, இறைவனும் அவருக்கு யானனயை வாகனமாய் அளித்து அருளி, விரைவில் கைலை வருமாறு பணிக்கின்றார். அவர் இனிய நண்பர் ஆன சேரமான் பெருமாள் நாயனார் என்னும் அரசரும் இதை அறிந்து தம் குதிரை மேல் ஏறிக் கைலைப் பயணத்தைச் சுந்தரமூர்த்தி நாயன்மாருடன் தொடங்குகின்றார். செல்லும் வழியில் திருக்கோவலூர் என்னும் ஊரில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஒளவைப் பாட்டி விநாயகருக்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமாள் நாயனாரும், ஒளவையிடம் தாங்கள் திருக்கைலை செல்வதாய்த் தெரிவிக்க ஒளவைப் பாட்டியும், சரி என்று சொல்லிவிட்டுத் தன் வழிபாட்டைத் தொடர்ந்தாள். வழிபாடு நடக்கும்போது ஒளவைப் பாட்டி, "சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட" என்று ஆரம்பிக்கும் விநாயகர் அகவலைப் பாடித் துதிக்கின்றார். இந்தப் பாடல் தொகுப்பானது யோக சாஸ்திரங்களைச் சொல்லித் தருவது. இதில் யோகத்தின் ஆரம்பமான மூலாதாரத்தில் குடி இருக்கும் கணபதியைத் துதிப்பதில் ஆரம்பித்துக் கடைசியில் சகஸ்ராரம் என்னும் யோகசித்தியை அடையும் விதம் குறித்துப் பாடியுள்ளார்.


"சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி
அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய்
கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி"


என்று பாடி அந்தச் சதாசிவனின் உள்ளொளியைக் காட்டித் தந்தது பற்றிப் பாடி இருக்கின்றார். இதனால் மனம் மகிழ்ந்த விநாயகர் ஒளவைப்பாட்டியைத் தன் துதிக்கையால் ஒரே தூக்காகத் தூக்கிக் கைலையில் உட்கார்த்தி வைத்துவிட்டார். ஒளவைப் பாட்டிக்கு மிக்க மகிழ்ச்சி. அப்போது தான் மெதுவாக அங்கே வந்தனர் சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும். இருவருமே ஒளவையைப் பார்த்துத் திகைத்தனர். என்ன இது? நாம் பார்க்கும்போது கிழவி கிளம்பக் கூட இல்லையே? இப்போ இங்கே எப்படி என்று கேட்க ஒளவை பதில் சொல்கின்றாள்:


"மதுர மொழி நல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தை
முதிர நினைய வல்லார்க்கரிதோ முகில் போன் முழங்கி
அதிர நடந்தீம் யானனயும் தேரும் அதன்பின் வருங்
குதிரையுங் காதங் கிழவியும் காதங் குல மன்னரே!"


என்று தான் மதுரமான மொழியுடைய உமையம்மையின் புதல்வன் ஆன விநாயகனைத் துதித்து வந்ததால் அவன் அருளாலே, யானைக்கும், குதிரைக்கும் முன்னாலேயே கைலை வந்தடைய முடிந்தது என்று சொல்கின்றார். விநாயக வழிபாட்டுக்குக் கைமேல் பலன் கிடைக்கிறது .
ஒரு முறை சிவ கணங்களில் ஒருவர் மகாவிஷ்ணுவின் சங்கை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார். செய்வதறியாது திகைத்த விஷ்ணு, சிவனிடம் சென்று முறையிடச் சென்றார். அப்போது தன் சங்கின் ஒலி அவருக்குக் கேட்டது. சங்கொலி கேட்ட திசை நோக்கிச் சென்றார் அவர். சிவ கணங்களில் ஒருவர் அந்தச் சங்கை ஊதிக் கொண்டு இருப்பதைக் கவனித்தார். உடனே சிவனிடம் சென்று முறையிட, அவரும் விநாயகரைத் துதித்து வேண்டச் சொல்ல, விஷ்ணுவும் அவ்வாறே விநாயகரைத் துதிக்கின்றார். விநாயகர் அந்தச் சங்கை சிவகணத்திடம் இருந்து வாங்கித் தான் ஊதி விட்டு, விஷ்ணுவிடம் கொடுக்கின்றார். இந்தச் சங்கு ஊதும் கோலத்தில் ஆன விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலில் இருக்கின்றது. இந்த விநாயகருக்கு வேண்டிக் கொண்டால், சிறு குழந்தைகளுக்கு வரும், "பாலாரிஷ்டம்" என்னும் நோய் தீரும் என்றும் நம்பிக்கை நிலவுகின்றது. இந்த விநாயகர் திரு உருவம் சிதம்பரம் கோயிலின் பிராகாரத்தில் அர்த்தஜாம சுந்தரர் சந்நிதிக்கு அருகே காணப்படுகின்றது.


காக்கும் கடவுள் ஆயிற்றே விஷ்ணு?? அவருக்குக் கூடவா இப்படி விநாயகரைத் துதிக்க வேண்டி இருந்தது என்று தோன்றுகிறது அல்லவா? விஷ்ணுவுக்கு மட்டுமல்ல. விநாயகரின் தந்தை ஆன சாட்சாத் அந்தப் பரமேஸ்வரனே விநாயகரைத் துதிக்காமல் சென்றதால் கஷ்டப் பட்டான். ஏற்கெனவே பார்த்திருப்போம் என்றாலும், திரும்பப் பார்ப்போமா?? அருணகிரிநாதர் தன் திருப்புகழில் முதலில் பாடிய விநாயகர் வாழ்த்தில் கீழ்க்கண்ட வரிகளின் அர்த்தம் தெரியுமா உங்களுக்கெல்லாம்???


"முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா" என்று சொல்கின்றார் அருணகிரியார். முப்புரத்தையும் எரித்து, திரிபுர சம்ஹாரம் செய்ய சிவன் தேரில் ஏறிவிட்டாராம். அதுவும் எப்படி???? தேவர்கள் அனைவரும் ஆயுதங்களாகவும், வாகனங்களாகவும் மாறி நிற்க, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாக அந்த வில்லில் கட்டி, அந்த ஸ்ரீமந்நாராயணனையே அம்பாக மாற்றிக் கொண்டு, சூரிய, சந்திரத் தேரிலே புறப்பட்டாராம் ஈச்வரன். ஆனால் கிளம்பிய தேர் நின்று விட்டதாம். ஏன்? அச்சு முறிந்து விட்டது. அதனால் தேர் நின்றுவிட்டது. அப்போது தான் புரிந்ததாம் பரமேஸ்வரனுக்கு. விநாயகனை வழிபடாமல் தான் கிளம்பியதும், தேவர்கள் அனைவருமே விநாயக வழிபாடு செய்யாததும் புரிந்ததாம். உடனேயே விநாயகரை வழிபட, தேர் அச்சு மீண்டும் பொருத்தப் பட்டு சிவனார் தேரிலேறித் தன்னுடைய அட்டஹாசம் என்னும் சிரிப்பால் திரிபுர சம்ஹாரம் செய்தாராம். இந்தத் தேர் முறிந்த இடம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள அச்சிறுபாக்கம் என்னும் சிறு ஊர் ஆகும் என்றும் சொல்கின்றனர்.




இது தவிர, பாற்கடலைக் கடையும்போதும், தேவர்களோ, அசுரர்களோ விநாயக வழிபாடு இல்லாமலேயே கடைய ஆரம்பித்தனர். வாசுகி பாம்பு தான் கயிறு, மேரு மலை, மத்து. மேரு மலையில் வாசுகியைக் கட்டி இரு பக்கமும் இழுக்கின்றனர். பாற்கடலில் இருந்து அமிர்தம் வரவேண்டியதற்குப் பதிலாக வாசுகி கக்கும் விஷம் தான் வருகின்றது. அந்தச் சூடு தாங்காமல் தேவாசுரர்கள் அலறுகின்றனர். வெண்மையாக அன்று வரை இருந்த மகாவிஷ்ணுவோ, இந்த விஷக் காற்றுப் பட்டதும் நீலமாகிவிட்டார். திடீரென ஒரு பெரும் சத்தம்!! வாசுகியால் முடியவில்லை, கயிறு தளர, மேரு மலை சரியத் தொடங்கியது. கலங்கினர் அனைவரும். அப்போது தோன்றியதாம் விநாயகரை வழிபடாமல் தொடங்கி விட்டோம் எனத் தேவேந்திரனுக்கு. உடனே விநாயகரை வழிபட எண்ணினான். ஆனால் திரு உருவம் கிடைக்கவில்லையே?? கடல் நுரையையே விநாயகராய்ப் பிரதிஷ்டை பண்ணினான். அந்தக் கடல் நுரையிலே விக்னேஸ்வரனை ஆவாஹனம் செய்து பூஜை, வழிபாடுகள் செய்ய வாசுகியும் மீண்டும் தயார் ஆனான். பொங்கிய ஆலகாலத்தையும் விஷ்ணு, பரமசிவனுக்குக் கொடுக்கச் சொல்ல, அந்த விஷத்தை ஆலகால சுந்தரர் ஏந்தி வந்து சிவனிடம் கொடுக்க சிவன் அதை ஒரே வாயாக முழுங்க, விஷம் உள்ளே போனால் அண்ட சராசரங்களுக்கும் ஆபத்து நேரிடும் என உணர்ந்த அம்மையோ, சிவன் கழுத்தைத் தன் திருக்கரங்களால் பிடிக்க, சிவன் "திருநீலகண்டன்" ஆகி ஆசிகள் புரிய, பாற்கடல் கடையப்பட்டு, அமிர்தம் கிடைத்தது. கடல் நுரையால் ஆன விநாயகர் திரு உருவம் கும்பகோணம் சுவாமி மலைக்கு அருகே திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இன்றும் திருவலஞ்சுழியில் விநாயகரைக் கடல் நுரை உருவில் காணலாம்.


விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.


மாகத ரிஷியின் மகன் கஜாசுரன் என்பவன். அவன் ரிஷி புத்திரனாக இருந்தாலும், அவன் தோழர்கள் அனைவருமே அரக்கர்களாக இருந்தமையால் அவனுக்கும் அரக்க குணமே மேலோங்கி இருந்தது. அனைவரையும் துன்புறுத்தி வந்தான். முக்கியமாய் அவனைப் பார்ப்பவர்கள் அனைவருமே தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போட்டுக் கொண்டு வணங்க வேண்டும் என ஆணையே பிறப்பித்திருந்தான். இந்த கஜாசுரன் ஒரு முறை விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, தன் வலிமையைக் காட்டுவதற்காக அண்டச் சுவர் ஒன்றை இடித்துத் தள்ள, ஆகாய கங்கை பொத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தனை வெள்ளமும் அனைத்து உலகங்களையும் மூழ்க அடிக்க, உலகே ஜலப் பிரளயத்தில் மிதந்தது. அண்ட சராசரமும் வெள்ளத்தில் மூழ்க அனைவரும் கதி கலங்கினார்கள். என்ன செய்வது எனத் திகைத்தனர். பூலோகத்தில் ஒரே ஒரு இடம் மட்டுமே மூழ்காமல் இருக்கவே, அனைவரும் அதிசயத்துடன் அங்கே வந்து ஒதுங்கலாம் என நினைத்து வந்து பார்த்தனர்.


அங்கே விநாயகர் வீற்றிருந்தார். உடனேயே தேவர்கள் அனைவரும், விநாயகரைத் துதித்து வணங்க, விநாயகரும் தம் துதிக்கையால் அனைத்துப் பிரளய நீரையும் உறிஞ்ச, வெள்ளம் வடிந்தது. தேவர்கள் கஜாசுரனைப் பற்றிச் சொல்ல விநாயகர் அவனுடன் போரிட்டு வென்று, அவனைத் தன் வாகனமாக மாற்றிக் கொண்டார். இந்த விநாயகர் "கலங்காமல் காத்த விநாயகர்" என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் இடம் பெற்று அருள் பாலித்து வருகின்றார்..